Thursday, February 16, 2012

"வடக்கே பாரதிதாசன், தெற்கே பாரதியார்" - என் விகடனில் - கோ.சுகுமாரன்


"வடக்கே பாரதிதாசன்... தெற்கே  பாரதியார்!" -  கோ.சுகுமாரன்

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான உரிமை மீறல்கள் எங்கு நடந்தாலும் அதற்கு எதிரான குரலை உயர்த்தும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் கோ.சுகுமாரன், புதுச்சேரி குறித்த தன் நினைவுகளையும் உணர்வுகளையும் இங்கு பகிர்ந்துகொள்கிறார்.

"புதுவையில் தற்போது மஞ்சினி நகர் என்று அழைக்கப்படும் பகுதிதான் என் முன்னோர்கள் பிறந்த பகுதி. எங்கள் தெருவுக்கு வடக்கில் பெருமாள் கோயில் வீதியில் பாரதிதாசன், தெற்கில் ஈஸ்வரன் கோயில் வீதியில் பாரதியார் வாழ்ந்த வீடுகள் உள்ளன. இரண்டு மகத்தான தமிழ் ஆளுமைகள் உலவிய வீடுகள் என்ற அறிதலே இல்லாமல் இந்த வீடுகளுக்குச் சென்று விளையாடுவோம்.

வீட்டுக்குத் தெரியாமல் கடலில் குளிப்பது ஆபத்தாக முடிவதால் குளிக்க வீட்டில் தடைபோடுவார்கள். கால் விரல்களுக்கு இடையே படிந்து இருக்கும் கடல் மணல், அணிந்து இருக்கும் துணியை நக்கி உப்புக் கரிக்கிறதா எனப் பார்த்து, கடலில் குளித்ததை உறுதிசெய்து கண்டிப்பார்கள். பல நேரங்களில் கடற்கரையில் சட்டை, காற்சட்டையைக் கழற்றிவைத்துவிட்டு குளிக்கப்போய், அவற்றைத் தொலைத்துவிட்டு நிர்வாணமாக வீட்டுக்குச் சென்று அடி வாங்கிய நாட்களும் உண்டு. ஒழுங்கு நிறைந்த வீதிகள்தான் எங்களுக்கு விளையாட்டுத் திடல். கோட்டிப் புல், கண்ணாமூச்சி, திருடன் போலீஸ் என, சகல விளையாட்டுக்களும் வீதியில்தான் நடக்கும். இன்று சிறுவர்கள் தங்களுக்கான வெளி இன்றி தவிப்பது பரிதாபம். சாதி அடையாளத்தை ஞாபகப்படுத்தும் ஊர்களின் பெயர்கள், தெருக்கள் முதலியார்பேட்டை, ரெட்டியார்பாளையம், கோமுட்டித் தெரு, செட்டித் தெரு, வெள்ளாள வீதி என, இன்றும் தொடர்வது அழகு நகரத்தின் அவலம்தான்!

நகரத்தைப் பிரிக்கும் வாய்க்காலுக்குக் கிழக்கே உள்ள பகுதி வெள்ளை நகரம் என அழைக்கப்படுகிறது. இங்கு பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவர்கள் பெரும் பகுதி வசித்து வருகின்றனர். பிரெஞசுக் குடியுரிமை பெறுவது என்பது ஒவ்வொரு இளைஞனின் கனவு. இதற்காக பிரெஞ்ச் கற்றுக்தரும் அலியான்ஸ் ஃபிரான்சேஸ், லிசேபிரான்சேஸ் பள்ளி முன்பு மாணவிளைக் காதலிக்க இளைஞர்கள் தவம் இருப்பது சுவாரஸ்யம் நிறைந்த தனிக் கதை. ஜீலை மாதம் மூன்று மாதத்துக்கு விடுமுறையில் தங்களின் சொந்த ஊருக்கு பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற குடும்பத்தினர் வருவர். நவீன பைக்கும், கையில் 'குர்மாத்தும்' அணிந்த இளைஞர்கள் எப்படியாவது அந்தக் குடும்ப இளம் பெண்களில் ஒருத்தியைக் காதலித்து பிரெஞசுக் குடியுரிமைப் பெற்று பிரான்சுக்குச் செல்ல எடுக்கும் பகீரத முயற்சிகளை ரசிக்காமல் இருக்க முடியாது.

அறிவுத்தளத்தில் இயங்குபவர்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் ரோமன் ரோலண்ட், பிரெஞ்சு ஆய்வு நிறுவனம், புதுவை பல்கலைக்கழக நூலகங்கள் பெரும் தரவுகளைக் கொண்டு விளங்குகின்றன. வெள்ளை நகரத்தில் 1965 முதல் இயங்கிவரும் "கபே லூயின்" என்ற சிறிய ஹோட்டலில் ஒரு டீ குடித்துக்கொண்டே எம்.எல்.ஏக்ளும் அமைச்சகளும் விவாதிப்பது உண்டு.

அரசியல், இலக்கியம், அழகியல், நாகரிகம் தேய்ந்த எங்கள் அழகான தொருக்களில் நடைபோடுவது இன்றும் எனக்குக் கம்பீரமான அனுபவம்தான்!".

 
* இவர் 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' என்ற மனித உரிமைக்கான அமைப்பின் செயலாளராக உள்ளார்!

* வீரப்பனால் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது, நெருக்கடி நிறைந்த சூழலில் அரசு அனுப்பிய மீட்புக் குழுவில் இடம் பெற்று ராஜ்குமார் உள்ளிட்டவர்களை மீட்டவர். அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு நீதி கிடைக்கப் பாடுபட்டவர்!

* மாவோயிஸ்ட் ஆட்சி புரியும் நேபாளத்தில் மன்னராட்சி முடிந்து அங்கு நடந்த முதல் பொதுத் தேர்தலில் சர்வதேசத் தேர்தல் பார்வையாராகப் பணியாற்றிய 43 பேரில் சுகுமாரனும் ஒருவர்!

* காஷ்மீர், வடக்கிழக்கு மாநிலங்கள், நக்சல்களின் கட்டுப்பாட்டில் உள்ள சட்டீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களுக்கு, ஆபத்தான சூழலில் சென்று மனித உரிமை மீறல்களைக் கண்டறிந்து வெளிப்படுத்தியவர்!

* சிறைகளின் நிலைமைகளைக் கண்டறிய அமைக்கப்பட்ட அகில இந்திய குழுவில் இடம்பெற்று பல மாநிலச் சிறைகளுக்கு நேரில் சென்று அதன் நிலைமைகளை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கையாகத் தந்தவர்!

Thursday, January 12, 2012

என் சிட்டுக் குருவிகளைக் காணவில்லை!


நான் குடியிருக்கும் வீட்டிற்கு எதிர்வீட்டு மாடியில் வசித்தவர்கள் தினம்தோறும் அதிகாலையில் தெரு வாசலில் அழகான கோலம் போட்டு அதன் நடுவே ஒரு கைப்பிடி அரிசியை போடுவார்கள். அதிகாலைப் பொழுதில் அந்த அரிசியைத் தேடி பத்துக்கும் மேற்பட்ட சிட்டுக் குருவிகள் வரும். அவை அந்த அரிசியினை “கீச் கீச் சத்தத்துடன் கொத்திக் கொத்தி உண்ணும். அந்த அழகை நான் ரசிக்கத் தவறுவதில்லை. அந்த சிட்டுக் குருவிகள் போட்டிப் போட்டுக் கொண்டு அரிசியை உண்ணும். சில நேரங்களில் திடீரென சண்டைப் போட்டுக் கொண்டு பறந்து ஓடி எங்கோ மறைந்துவிடும். எங்கே அந்த சிட்டுக் குருவிகள் என கண்கள் அலைபாயும். சிறிது நேரம் கழித்து மீண்டும் ஓடிவந்து விடுபட்ட அரிசிகளை உண்ணும். அப்போதுதான் தெரியும் அவைக்குள்ளான சண்டை கட்டுக்கடங்காத அன்பு தவழும் ஊடல், கூடலுக்கான பொய்ச் சண்டை என்பது. அந்த சிட்டுக் குருவிகளை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என் மனதில் வேண்டிக் கொள்வேன். எதைப் பற்றியும் கவலைப்படாத மனநிலையில் சுற்றித் திரியும் எனக்கு அந்த சிட்டுக் குருவிகள் மீது அப்படியொரு பாசம், நேசம், காதல்.

சிட்டுக் குருவிகள் அழிந்து வருவது குறித்து இணையத்தில் ஒரு பதிவினைப் படித்தேன். நவீன உலகில் செல்போன்களால் சிட்டுக் குருவி இனமே அழிந்துப் போகிறது. செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு சிட்டுக் குருவிகளைக் கொன்று வருகின்றன. பயிர்களுக்குப் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதினால், அந்த தானியங்களை உண்ணுவதாலும் சிட்டுக் குருவிகள் மறைந்து வருகின்றன.

சிட்டுக் குருவிகள் அந்தக்கால பழைய வீடுகளில் உள்ள தாழ்வாரங்களில் கூடுகட்டி வாழும். கிராமங்களில் வீடுகளின் சுற்றுச் சுவரில் அதற்கென பிரத்யேகமாக பொந்துகள் அமைத்துக் கட்டுவார்கள். எங்கள் பூர்வீக, அம்மா பிறந்த கிராமத்திலுள்ள வீட்டிலும் இதுபோன்ற பொந்துகள் இன்றைக்கும் உள்ளன. நீண்ட ஏணிப் போட்டு ஏறி அந்த பொந்துகளில் கம்பு, கேழ்வரகு, தினைப் போன்ற தானியங்களைத் தினமும் காலையில் போட்டு வைப்போம். அவற்றை சிட்டுக் குருவிகள் மட்டுமல்லாது பச்சைக்கிளி போன்ற பறவைகளும் வந்து உண்ணும். இன்றைய நவீன வீடுகளில் சிட்டுக் குருவிகளுக்கு இடமில்லை. சிட்டுக் குருவிகளைப் பாதுகாக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 அன்று உலக சிட்டுக் குருவிகள் பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்று சிட்டுக் குருவிகளைப் பாதுகாக்க பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கோள்ளப்படுவது சற்று ஆறுதல் தருபவை.

இருபது ஆண்டுக் காலமாக வாடகைக்குக் குடியிருந்த எதிர்வீட்டுக்காரர்கள் நான்கு மாதத்திற்கு முன்னர் வீட்டைக் காலி செய்துவிட்டு, சொந்த வீட்டிற்குக் குடிப் போயினர். இனி அந்த சிட்டுக் குருவிகளுக்கு யார் அரிசி போடுவார்கள்? அவை ஏமாந்து போகாதா? அதேபோல், அந்த சிட்டுக் குருவிகள் பறந்து வந்து பார்த்து அரிசியின்றி ஏமாந்துப் போயின. அவைகளுக்குப் பசியாற வேறு எங்காவது தீனி கிடைக்கலாம். ஆனால், நாள்தோறும் தடையின்றி, உரிமையோடு உண்டு மகிழ்ந்த அந்த சிட்டுக் குருவிகளுக்கு இந்த ஏமாற்றம் தாங்க முடியாததுதான். என் வீட்டுப் பக்கமே எட்டிப் பார்க்காத அந்த சிட்டுக் குருவிகள் முதல் முறையாக என் பால்கனி கிரிலில் வந்து அமர்ந்து ஏக்கத்துடன் எதிர்வீட்டையும், அரிசி கிடக்கும் அழகிய கோலம் நிறைந்த தரையையும் பார்த்துப் பார்த்து விம்மின. அப்படியொரு சூழல் வந்ததன் காரணம்கூட அறியாத சிட்டுக் குருவிகளுக்கு இது துயரமானது. அந்த துயரம் என்னையும் வாட்டின. இரவு நேர தனிமையில் அந்த சிட்டுக் குருவிகள் நினைவில் வந்து என் மனதைப் பிழியும். இழப்புகளையும், துயரங்களையும் சுமந்து, சுமந்து வலியைத் தாங்கித் தாங்கி உரமேறிய என் மனது இவ்வளவு பலவீனமானதா என்பதை அக்கணத்தில் உணர்வேன். 

அதுவரையில், அந்த சிட்டுக் குருவிகளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த எனக்கு, அவற்றை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. மறுநாள் கைப்பிடியளவு அரிசி, கம்பு, தினைப் போன்ற தானியங்களை அந்த சிட்டுக் குருவிகளுக்காக என் பால்கனியில் இரவு நேரத்தில் போட்டுவிட்டு தூங்கினேன். அன்று இரவு முழுவதும் அரை குறையான தூக்கம். அந்த சிட்டுக் குருவிகள் நாம் போட்ட தானியங்களை உண்டு பழையபடி மகிழுமா என்ற கேள்வி எனக்குள். அதிகாலைப் பொழுது புலரும் அந்த இருட்டும், வெளிச்சமும் கலந்த வேளையில் “கீச் கீச் ஒலியுடன் அதே சிட்டுக் குருவிகள் என் பால்கனியில். எட்டிப் பார்த்தால் ஓடிவிடுமோ என்ற அச்சத்திலேயே என் அறை விளக்கைக்கூட போடாமல் எவ்வித அரவமும் இல்லாமல் கதவு இடுக்கு வழியே பார்த்தேன். அதே பழைய உற்சாகத்துடன் அந்த சிட்டுக் குருவிகள் தானியங்களை உண்டும், சண்டையிட்டும் குலாவின. எனக்கு அளவில்லாத சந்தோஷம். காதலி காதலனிடம் காதலைச் சொன்ன அந்த தருணத்தில் உண்டாகும் வர்ணிக்க முடியாத உற்சாகம், உணர்வு போல் எனக்கு. ஒரு வகையில் வெற்றிக் களிப்பும்கூட. எதிர்வீட்டு அரிசிக்குக் கட்டுப்பட்டிருந்த அந்த சிட்டுக் குருவிகள் இப்போது என் பால்கனி தானியங்களுக்குக் கட்டுப்பட்டது இரட்டிப்பு மகிழ்ச்சி. அன்று முதல் நான் சிட்டுக் குருவிகளுக்குத் தீனி போடாத நாட்களே இல்லை. வெளியூர் சென்றிருந்தாலும் அண்ணனிடம் குருவிக்கு அரிசி போட்டாயா என்று போனில் விசாரிக்கும் அளவுக்கு அது என் உள்ளார்ந்த கடமையானது. இதற்காக பலமுறை என் அண்ணனை நான் கடிந்துக் கொண்டதும் உண்டு.

இளம் பருவத்தில் தீவிரமான இயக்கச் செயல்பாடுகளில் என் இளமை கழிந்தது. அதற்காக நான் ஒருபோதும் வருந்தியதில்லை. தனித்திருக்கும் எனக்கு அந்த சிட்டுக் குருவிகளின் நட்பு அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தது. அதன் “கீச் கீச் ஒலிதான் என்னை அதிகாலையில் எழுப்பும் பூபாளம். அவை மீது எனக்கு அலாதி பிரியம். சில நேரம் ஆர்வம் மிகுதியில் பால்கனிக்குச் சென்றால் அந்த சிட்டுக் குருவிகள் பறந்து சென்று சாலையில் எதிர்பக்கமுள்ள பாதாம் மரத்தில் அமர்ந்துக் கொண்டு என்னைப் பார்த்துக் கண் சிமிட்டி கேலி பேசும். பலமுறை அவ்வாறு நடக்கும். நான் உள்ளே சென்ற பின் மீண்டும் பால்கனிக்கு வந்து தீனி எடுப்பதோடு அவற்றின் சேட்டைகள் தொடரும். அப்போது அவை எழுப்பும் பலவிதமான “கீச் கீச் ஒலியின் வேறுபாடுகள் அக்குருவிகளின் மனநிலையை உணர்த்தும். நினைவிலும், நேரிலும் ஆரத்தழுவி சுகம் காணும் காதலர்கள் போல், அந்த சிட்டுக்களோடு என் வாழ்க்கை குதூகலத்துடன் ஓடியது.

என் வாழ்க்கையில் நெஞ்சை அறுக்கும் துயரமாக “தானே புயல் வந்தது. என் செல்ல சிட்டுக் குருவிகளுக்காக பால்கனியில் போட்டு வைத்திருந்த தானியங்களை வாறி சென்றன சூறாவளிக் காற்றுகள். அன்று முதல் என் காதல் சிட்டுக் குருவிகளைக் காணவில்லை. என் வாழ்க்கையில் மீண்டும் வெறுமை. புயல், மழை ஓய்ந்து வருமென நம்பி பால்கனியில் போட்டு வைத்த தானியங்கள் சீண்டுவாரின்றி அப்படியே கிடக்கின்றன. உயிரற்ற உடல்களைப் போல் தானியங்களும், நானும். திரும்பி வரும் என்ற நம்பிக்கையில் நாட்கள் நகர்கின்றன. புயலால் சாய்ந்து கிடந்த பாதாம் மரமும் அப்புறப்படுத்தப்பட்டு, அங்கு மரம் இருந்ததற்கான அடையாளமே இல்லை இப்போது. என் சிட்டுக் குருவிகளுக்கு என்ன ஆயிற்று? தெரியவில்லை. அரிசி, கம்பு, தினை நிரப்பி வைக்கப்பட்டுள்ள பாட்டில்கள் திறக்கப்படாமலேயே கிடக்கின்றன. என் சிட்டுக் குருவிகளின் நினைவைப் பசுமையாக வைத்திருக்கின்றன அவை.   

என் சிட்டுக் குருவிகளைக் காணவில்லை. நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் நான். 

Sunday, November 27, 2011

ஊழல் அதிகாரி ராகேஷ் சந்திராவை ஐ.ஏ.எஸ். ஆக்கியதற்கு கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 25.11.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

சுனாமி வீடு கட்டியதில் நடந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ.யால் குற்றம்சாட்டப்பட்ட ராகேஷ் சந்திராவிற்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கியதன் மூலம் மத்திய, மாநில அரசுகள் ஊழலுக்கு வெளிப்படையாக துணைப்போய் இருப்பதை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

2009-ல் சுனாமி மறுவாழ்வு திட்ட அதிகாரியாக இருந்த போது ராகேஷ் சந்திரா 1440 வீடுகள் கட்டியதில் ஊழல், முறைகேடுகள் நடந்ததாக கூறி சி.பி.ஐ. அவர் மீது வழக்குப் பதிவு செய்தது. அப்போது அவரை கலெக்டர் பதவியில் இருந்து விடுவித்த அரசு அவரை காத்திருப்போர் பட்டியல் வைத்திருந்தது. இந்நிலையில், கடந்த நவம்பர் 20ந் தேதியன்று அவருக்கு கூட்டுறவு, குடிமைப் பொருள் வழங்கல், கலைப் பண்பாடு ஆகிய முக்கிய துறைகளை ஒதுக்கி அரசு ஆணைப் பிறப்பித்தது. அரசின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது மாநில அரசின் பரிந்துரையின் பேரில் மேத்யூ சாமுவேல், ராகேஷ் சந்திரா, தேவநீதிதாஸ், பாபு ஆகிய அதிகாரிகளை மத்திய அரசு ஐ.ஏ.எஸ். ஆக்கியுள்ளது. கடுமையான ஊழல் குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கை எதிர் கொண்டிருக்கும் ராகேஷ் சந்திராவை ஐ.ஏ.எஸ். ஆக்கியிருப்பது ஊழலுக்குத் துணைப் போவதோடு, வழக்கு விசாரணையை சீர்குலைக்கும் திட்டமிட்ட செயல். ஊழலுக்கு எதிராக நாடெங்கும் போராட்டம் நடந்து வரும் வேளையில் மத்திய, மாநில அரசுகளின் இந்த செயல் கண்டனத்திற்குரியது.

அதோடு மட்டுமல்லாமல், பாரதியார் பல்கலைக்கூடத்தின் பேராசிரியர் போஸ் என்பவர் மகாத்மா காந்தி, பாரதியார், பாரதிதாசன் போன்ற தேசத் தலைவர்களையும், தமிழ் மொழியையும் இழிவுப்படுத்தி பேசியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த நடவடிக்கையை மேத்யூ சாமுவேல் எந்தவித காரணமும் இல்லாமல் ரத்து செய்தார். இதனைக் கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கடந்த அக்டோபர் 10ந் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்தினோம். மேலும், அவரை ஐ.ஏ.எஸ். ஆக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தோம்.ஆனால், இதையெல்லாம் மீறி அவருக்கு தற்போது ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

ஊழல் செய்த, தேசத் தலைவர்களை இழிவுப்படுத்தியவரை காப்பாற்றிய அதிகாரிகளை ஐ.ஏ.எஸ். ஆக்கி இருப்பது அதிகாரிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு அரசு அளித்துள்ள மிகப் பெரிய அங்கீகாரம். நேர்மையாக பணிபுரியும் அதிகாரிகள் இனி ஊழல் செய்தால்தான் பதவி உயர்வும், உயர் அந்தஸ்தும் பெற முடியும் என்ற மன நிலைக்கு தள்ளபடுவார்கள். இது ஒட்டுமொத்த நிர்வாகத்தையே சீர்குலைக்கும்.

எனவே, இந்த பிரச்சனையில் குடியரசு தலைவர் தலையிட்டு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டு ராகேஷ் சந்திரா, மேத்யூ சாமுவேல் ஆகிய அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். வழங்கி இருப்பதை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து குடியரசுத் தலைவருக்கு மனு ஒன்றையும் அனுப்ப உள்ளோம்.

கூடங்குளம் போராட்டம்: மத்திய அமைச்சர் நாராயணசாமி வீட்டை முற்றுகையிட முயன்ற 100 பேர் கைது


மத்திய அமைச்சர் நாராயணசாமியின் வீட்டை முற்றுகையிட முயன்ற 4 பெண்கள் உட்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டத்தை,  பொய்யான தகவல்களை கூறி திசை திருப்பியும், போராட்டத்தை வழிநடத்தும் முன்னணி தலைவர்களை கொச்சைப்படுத்தியும் தொடர்ந்து பேசி போராட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மத்திய அமைச்சர் நாராயணசாமியை கண்டித்து, அவரது வீட்டை இன்று முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக பல்வேறு அமைப்புகள் அறிவித்திருந்தன. மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கூட்டிய கூட்டத்தில் பல்வேறு கட்சி,  அமைப்புகள் நிர்வாகிகள் இந்த முடிவை எடுத்தனர்.

அதன்படி 22.11.2011 அன்று காலை 10 மணியளவில் போராட்டம் நடத்துவதற்காக மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள்  நெல்லித்தோப்பு சிக்னல் அருகில் கூடினர்.

பின்னர் அங்கிருந்து எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள மத்திய அமைச்சர் நாராயணசாமியின் வீட்டை நோக்கி பேரணியாக புறப்பட்டு சென்றனர். இந்த பேரணிக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு  செயலாளர் கோ.சுகுமாரன் தலைமை தாங்கினார். மனித உரிமைக்கான மக்கள் கழக தலைவர் அ.மார்க்ஸ் முன்னிலை வகித்தார்.

இப்பேரணியில் தமிழர் தேசிய இயக்க தலைவர் அழகிரி, சிங்காரவேலர் முன்னேற்ற கழக தலைவர் சந்திரன், கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெகன்நாதன், அம்பேத்கர் மக்கள் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் அஷ்ரப், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகமது சலீம், மக்கள் சிவில் உரிமைக்கழக தலைவர் அபிமன்னன், தனித்தமிழ் இயக்க தலைவர் தமிழ்மல்லன், இலக்கிய பொழில் இலக்கிய மன்ற தலைவர் பராங்குசம், செந்தமிழர் இயக்க அமைப்பாளர் நா.மு.தமிழ்மணி, மனித நேய அமைப்பு தலைவர் லோகலட்சகன், இந்திய சமூக செயல்பாட்டு பேரவை இணை செயலாளர் விக்டர் ஜோசப் ராஜ், இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட செயலாளர் அபுபக்கர், தமிழர் களம் தலைவர் பிரகாசு, அத்தியாப்பா கெமிக்கல்ஸ் தொழிலாளர் சங்க தலைவர் சின்னப்பா, மக்கள் விழிப்புணர்ச்சி இயக்க செயலாளர் சரவணன், முகவரி அமைப்பு தலைவர் மதிவதணன், புதுவை தமிழர் குரல் பொறுப்பாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இப்பேரணி அண்ணா சிலை அருகில் வந்தபோது போலீசார் தடுத்து நிறுத்தி,  4 பெண்கள் உட்பட  100 பேரை கைது செய்தனர்.

அணுமின் நிலையங்களில் பேரழிவு ஏற்பட்டால் தலைமுறைகள் பாதிக்கப்படும்: எக்ஸ்.டி.செல்வராசு பேட்டி

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தை சேர்ந்த அருட்தந்தை எக்ஸ்.டி.செல்வராசு, மனித உரிமைக்கான மக்கள் கழக தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ் ஆகியோர் 11.11.2011 அன்று புதுச்சேரியில் செய்தியாளர் மன்றத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்க 1988ல் ஒப்பந்தம் போடப்பட்டது. அங்கு அணுமின் நிலையம் அமைக்க 1987ம் ஆண்டில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. அணு உலையும், பாதுகாப்பும் இரவும் பகலும் போன்றது. இரண்டும் ஒன்றாக இணைந்து இருக்க முடியாது. குஜராத், மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட இந்த அணு உலை தமிழகத்தில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் வரவேற்பு கொடுத்துவிட்டன.

இந்த அணுமின் நிலையம் மூலம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெருகும் என்று கூறும் பிரதமர் ராமேஸ்வரத்தில் தினம், தினம் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படும் மீனவர்களுக்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதற்கு ரூ. 21 ஆயிரம் கோடி செலவு செய்துவிட்டதாக கூறுகின்றனர். 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேட்டால் 1.70 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு ஊழல்களும் நடந்துள்ளது. இவைகளை கணக்கில் கொண்டு 21 ஆயிரம் கோடி ரூபாய் முக்கியமா? 30 லட்சம் மக்களின் வாழ்க்கை பெரிதா? என்று பார்த்து முடிவு எடுக்க வேண்டும்.

அணு உலைக்கு எதிர்ப்பான போராட்டங்களை சாதி மற்றும் மதத்தை கலந்து குலைக்க முயற்சிக்கின்றனர். அணு உலையில் மின்சாரம் தயாரிப்பது ஒரு யூனிட்டிற்கு ஒரு ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் என்று கூறுகின்றனர். ஒரு அணு உலை 20 ஆண்டுகள்தான் இயங்கும். ஆனால் அந்த அணு உலையை 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதற்காக ஆகும் செலவையும் சேர்த்தால் மிகவும் கூடுதலாகவே ஆகும்.

அப்துல் கலாம் 6 ரிக்டர் பூகம்ப பாதிப்பு வரை கூடங்குளம் அணு உலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறுகின்றார். ஆனால் ஜப்பானில் நாங்கள் எதிர்பார்த்ததைவிட கூடுதலான அளவிற்கு பூகம்ப பாதிப்பு ஏற்பட்டது என்று கூறுகின்றனர். அவ்வாறு ஏற்பட்டால் அழிவும் கண்டிப்பாக ஏற்படும். தஞ்சை பெரிய கோயில், கல்லணை போன்றவைகளை பாதுகாப்பாக கட்டியுள்ளதற்கு உதாரணமாக கூறுகின்றார். பூம்புகார், தனுஷ்கோடி போன்றவை இயற்கை சீற்றத்தால் அழிந்தும் உள்ளது. இதனையும் கருத்தில் கொண்டு அணு உலையை கொண்டு வரக்கூடாது.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 1987, 1991, 1999, 2002, 2003 ஆகிய ஆண்டுகளில் அசம்பாவித சம்பவங்கள் நேரிட்டுள்ளன. அதனால்தான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பற்றவை என்று சொல்கிறோம். ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க பயன்படும் மின்சாரத்தின் விலையை காட்டிலும் அணுமின் நிலையத்தின் கழிவுகளை பாதுகாப்பதற்கான செலவு அதிகமாகும்.

மேலும் அணுமின் நிலையங்களில் பேரழிவு ஏற்பட்டால் அதனால் பல தலைமுறைகள் பாதிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

பேட்டியின்போது மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் உடன் இருந்தார்.

கூடங்குளம் போராட்டத்தை திசைத்திருப்பியும், தலைவர்களைக் கொச்சைப்படுத்தி வரும் மத்திய அமைச்சர் நாராயணசாமி வீடு முற்றுகைப் போராட்டம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 16.11.2011 அன்று காலை 10 மணியளவில் புதுச்சேரி ரெவேய் சொசியால் சங்கத்தில் கட்சி மற்றும் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். கூட்டத்தில் இரா.அழகிரி (தலைவர், தமிழர் தேசிய இயக்கம்), கோ.செ.சந்திரன் (தலைவர், சிங்காரவேலர் முன்னேற்ற கழகம்), கோ.அ.ஜெகன்நாதன் (முன்னாள் தலைவர், கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்றம்), எம்.ஏ.அஷ்ரப் (மாவட்ட தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்), முகமது சலீம் (மாவட்ட செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி), இர.அபிமன்னன் (தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்), முனைவர் க. தமிழமல்லன் (தலைவர், தனித்தமிழ் இயக்கம்), பெ.பராங்குசம் (தலைவர், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம்), விக்டர் ஜோசப் ராஜ் (தேசிய இணைச்செயலர், இந்திய சமூக செயல்பாட்டு பேரவை), அபுபக்கர் (மாவட்ட தலைவர், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்), கோ.லோகலட்சகன், (தலைவர், மனித நேயம் அமைப்பு), சூ.சின்னப்பா (தலைவர், அத்தியப்பா கெமிக்கல்ஸ் தொழிலாளர் நலச் சங்கம்), கோ.பிரகாசு (தலைவர், தமிழர் களம்), பா.சரவணன் (செயலாளர், புதுச்சேரி மக்கள் விழிப்புணர்ச்சி இயக்கம்), மு.நாராயணசாமி (தலைவர், பெற்றொர், ஆசிரியர், மாணவர் நலச் சங்கம்), தே.சத்தியமூர்த்தி (ஒருங்கிணைப்பாளர், புதுவை தமிழர் குரல்), கி.கோ.மதிவதணன் (பொறுப்பாளர், முகவரி அமைப்பு) உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக எழுச்சியோடு நடந்து வரும் மக்கள் போராட்டத்தைப் பொய்யான தகவல்களைக் கூறி திசை திருப்பியும், போராட்டத்தை வழிநடத்தும் முன்னணி தலைவர்களைக் கொச்சைப்படுத்தியும் தொடர்ந்துப் பேசி போராட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மத்திய அமைச்சர் நாராயணசாமியை கண்டித்து வரும் 22.11.2011 செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது.

2. மக்களின் உயிருக்கும், வாழ்வாதாரங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ள கூடங்குளம் அணு உலை உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து அணு உலைகளையும் உடனடியாக மூட வேண்டுமென மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

3.அணு உலைகள் ஆபத்து நிறைந்தவை என கற்று தேர்ந்த விஞ்ஞானிகள் உறுதிபட கூறியுள்ள நிலையிலும், அமெரிக்காவில் மூன்று மைல் தீவு, ரஷ்யாவில் செர்னோபில், ஜப்பானில் புகுஷிமா போன்ற அணு உலை விபத்துகளில் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளதும், லட்சக்கணக்கானவர்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளதும் கண்முன் உதாரணங்களாக இருக்கும் போது உலைகள் பாதுகாப்பானவை என தொடர்ந்து மத்திய அரசு பிரச்சாரம் செய்து வருவது கண்டனத்திற்குரியது.

4. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடர்ந்து உறுதியோடு போராட்டம் நடத்தி வரும் கூடங்குளம், இடிந்தகரை மற்றும் தமிழக மக்களின் அனைத்து போராட்டங்களுக்கும் இக்கூட்டம் ஆதரவை தெரிவித்து கொள்கிறது.

Thursday, November 03, 2011

புதுச்சேரி அரசு செயலர் மேத்யூ சாமுவேலை ஐ.ஏ.எஸ். ஆக்க எதிர்ப்பு

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 03.11.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி அரசு செயலர் மேத்யூ சாமுவேலை ஐ.ஏ.எஸ். ஆக்க அரசின் பரிந்துரையை நிராகரிக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி அரசின் கலைப் பண்பாட்டு துறை செயலராக இருக்கும் மேத்யூ சாமுவேல் உட்பட மூன்று அதிகாரிகளை ஐ.ஏ.எஸ். ஆக்க மத்திய அரசுக்கு புதுச்சேரி அரசு பரிந்துரை செய்துள்ளது. இதனை மத்திய அரசும் பரிசீலித்து வருவதாக தெரிகிறது.

பாரதியார் பல்கலைக்கூடத்தின் பேராசிரியர் போஸ் என்பவர் தேச தலைவர் மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரை இழிவுப்படுத்தியும், தமிழ் மொழியைப் பழித்தும் பேசியதற்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை எவ்வித காரணமும் கூறாமல் மேத்யூ சாமுவேல் ரத்து செய்துள்ளார்.

இதனைக் கண்டித்தும், மேத்யூ சாமுவேல், போஸ் மீது நடவடிக்கை எடுக்க கேட்டும் கடந்த 10.10.2011 அன்று அனைத்து அமைப்புகள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். ஆனால், இதுவரை அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தவறு செய்த அதிகாரிகளை காப்பாற்றும் நோக்கத்தோடு அரசு செயல்பட்டு வருவது கண்டனத்திற்குரியது.

மேலும், இப்படிப்பட்ட அதிகாரிக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து அளிக்க புதுச்சேரி அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது தேச தலைவர்களையும், தமிழ் மொழியையும் கேவலப்படுத்தியதை ஆதரிப்பதாகும். இந்த பரிந்துரையை புதுச்சேரி அரசு உடனடியாக திருப்ப பெற வேண்டும்.

மேத்யூ சாமுவேலை ஐ.ஏ.எஸ். ஆக்க அரசின் பரிந்துரையை நிராகரிக்க வலியுறுத்தி டில்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.

Friday, October 21, 2011

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு ஆதரவு

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 21.10.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:


கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து இடிந்தகரையில் நடந்து வரும் மக்களின் தொடர் போராட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது.

திருநெல்வேலி மாவட்டதில் உள்ள கூடங்குளத்தில் ரஷ்ய அரசின் உதவியுடன் அணுமின் நிலையம் ஒன்றை மத்திய அரசு அமைத்து வருகிறது. இந்த அணுமின் நிலையம் அபாயகரமானது என்றும், இது செயல்பட தொடங்கினால் ஏற்படும் கதிர்வீச்சால் மக்களுக்கு பேராபத்து உண்டாகும் என அறிவியல் வல்லுநர்களும், சமூக ஆர்வலர்களும் ஆதாரத்துடன் கூறி வருகின்றனர்.

இந்த அணுமின் நிலையத்தை எதிர்த்து இடிந்தகரை கிராமத்தில் கூடங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 18ந் தேதியன்று மூன்றாவது கட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

இதனிடையே, மத்திய அரசு இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய 15 பேர் அடங்கிய நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழுவில் போராடும் மக்களின் பிரதிநிதிகள் யாரும் சேர்க்கப்படவில்லை எனக் கூறி போராட்டக் குழுவினர் நிபுணர் குழுவை நிராகரித்துள்ளனர்.

இந்நிலையில், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மனித உரிமைக்கான மக்கள் கழகத்தின் தமிழக தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், அந்த அமைப்பைச் சேர்ந்த மதுரை வழக்கறிஞர் ரஜினி, பழனிச்சாமி ஆகியோர் நாளை (22.10.2011) இடிந்தகரைக்கு நேரில் சென்று போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளனர்.

மேலும், அம்மக்களிடம் கலந்துரையாடி அவர்களின் உணர்வுகளை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளனர்.

Friday, October 14, 2011

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது தாக்குதல்: இந்துத்துவ சக்திகளுக்கு கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் 13.10.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷன் இந்து மதவாத சக்திகளால் தாக்கப்பட்டதை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

நேற்றைய தினம் பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்திற்கு எதிரில் உள்ள வழக்கறிஞர்களின் அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டிடத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு அத்துமீறி நுழைந்த இந்து மதவாத கும்பலைச் சேர்ந்தவர்கள் அவரை தாக்கியுள்ளனர். தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த வன்முறை செயலுக்கு ராம் சேனா என்ற அமைப்புதான் காரணம் என்பது சம்பவ இடத்தில் பிடிபட்டவரிடம் நடந்த முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ராம் சேனா கடந்த 2008ம் ஆண்டு கர்நாடகாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மிகப் பெரிய தாக்குதலை நடத்திய வன்முறை கும்பல் என்பது குறிப்பிடத்தக்கது.
 
காஷ்மீர் தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இது கருத்து சுதந்திரத்திற்கு விடப்பட்ட சவாலாகும். காஷ்மீர் பிரச்சனையை பேசுவது ஒன்றும் தேச விரோத செயல் அல்ல.

பிரசாந்த் பூஷன் ஒரு சிறந்த சட்ட வல்லுநர் மட்டுமல்ல, சமூக தளங்களில் பல்வேறு பிரச்சனைகளை முன்னெடுத்து, அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் தொடர்ந்து செயலாற்றி வருபவர். ஊழலுக்கு எதிராக போராடி வரும் அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்தவர். குறிப்பாக நீதித்துறையில் நடக்கும் ஊழலுக்கு எதிராக உறுதியாக போராடி வருபவர்.

பிரசாந்த் பூஷனை தாக்கிய அனைவரையும் போலீசார் உடனடியாக கைது செய்வதோடு, இத்தாக்குதல் குறித்த பின்னணியை கண்டறிந்து அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

தமிழையும், தலைவர்களையும் இழிவுப்படுத்திய பேராசிரியரை காப்பாற்றிய செயலர் மேத்யூ சாமுவேல் மீது நடவடிக்கை கேட்டு ஆர்ப்பாட்டம்

தமிழையும், தலைவர்களையும் இழிவுப்படுத்திய பேராசிரியரை காப்பாற்றிய கலைப் பண்பாட்டுத் துறை செயலர் மேத்யூ சாமுவேல் மீது நடவடிக்கை கேட்டு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன் போன்ற தலைவர்களை இழிவுப்படுத்தியும், தமிழ் மொழியை பழித்தும் பேசிய பாரதியார் பல்கலைக்கூட பேராசிரியர் போஸ் மீதான நடவடிக்கையை ரத்து செய்த கலைப் பண்பாட்டுத்துறை செயலர் மேத்யூ சாமுவேல் மீது நடவடிக்கை கோரி 10.10.2011 அன்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் தலைமை அஞ்சலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். இலக்கிய பொழில் இலக்கிய மன்ற தலைவர் பராங்குசம் முன்னிலை வகித்தார்.

சாகித்ய அகாடமி விருதாளர் ம.இலெ.தங்கப்பா தொடங்கி வைத்து கண்டன உரை ஆற்றினார். போராட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் அழகிரி, சிங்காரவேலர் முன்னேற்ற கழகத் தலைவர் சந்திரன், புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை அமைப்பாளர் மூர்த்தி, கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெகன்நாதன், அகில இந்திய பாரவட் பிளாக் கட்சி பொதுச்செயலாளர் முத்து, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் நா.மு.தமிழ்மணி, மக்கள் சிவில் உரிமைக் கழக தலைவர் அபிமன்னன், தமிழ்நாடு முன்ஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் அஷ்ரப், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முகம்மது சலீம், பூவுலகின் நண்பர்கள் அமைப்புத் தலைவர் சீனு.தமிழ்மணி, இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் அபுபக்கர், புதுச்சேரி மக்கள் விழிப்புணர்ச்சி இயக்கச் செயலாளர் பா.சரவணன், தமிழர் களம் தலைவர் பிரகாசு, அத்தியப்பா தொழிலாளர் நலச் சங்கத் தலைவர் சின்னப்பா மற்றும் பல்வேறு அமைப்பு, இயக்கத்தைச் சார்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் தமிழ் உரிமைக் கூட்டமைப்பு தலைவர் புலவர் கி.த.பச்சையப்பன் நிறைவுரை ஆற்றி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.